Share via:
புதன்கிழமை (அக்.18) சுபதினமான இன்று பொது மக்கள் வசதிக்காக சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுபதினமான புதன்கிழமைகளில் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம். அதனை கருத்தில் கொண்டு அன்றைய தினங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகளவில் ஆவணப் பதிவு செய்யும் வகையில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று (அக்.18) ஐப்பசி மாதத்தின் முதல் தினம் (புதன்கிழமை) என்பதாலும், சுபதினம் என்பதாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் வழக்கமாக 100 டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் வழக்கமாக ஒதுக்கப்பட்டு வரும் 200 டோக்கன்களுக்கு பதில் 300 டோக்கன்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் தக்கல் டோக்கன்களை பொறுத்தவரையில் 12 டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 4 டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.