Share via:
ஆம்னி பேருந்துகளை போரூர் சுங்கச்சாவடியில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் இந்த உத்தரவை மதிக்காமல் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளால் பூந்தமல்லி நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலால் திக்கித்திணறுகிறது. இதனால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.
தென்மாவட்டங்களுக்கு பயணமாகும் ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேடு முதல் செங்கல்பட்டு மார்க்கமாக இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளை உடனடியாக இயக்காமல், இருக்கைகள் நிரம்பும் வரை நிறுத்தி வைத்து இயக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆம்னி பேருந்தும் சுமார் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை அங்கேயே நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு நேர விரயம் ஏற்படுகிறது.
இதேபோன்று பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கம் மற்றும் மதுரவாயல் மேம்பாலம் அருகிலும் கூட எண்ணற்ற ஆம்னி பேருந்துகள் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் பணி முடிந்து செல்லும் பொதுமக்கள் கோயம்பேடு முதல் வானகரம் வரையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
இதனால் ஆம்னி பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தாமல், நீதிமன்ற உத்தரவை கடைபிடித்து பொதுமக்களுக்கு ஏற்படும் அவதியை போக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது