Share via:
சென்னை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 4, 6 ஆகிய 7 பகுதிகளில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மொத்தம் 5 கோடியே 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். 9,001 குடும்பங்களின் துயரை துடைக்கும் வகையில் முதலமைச்சர மு.க.ஸ்டாலின் ரூ.8.68 கோடி நிவாரணமாக வழங்க உத்தரவு பிறத்தார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 5ம் (டிசம்பர்) தேதியன்று கொசஸ்தலை எண்ணூர் முகத்துவார பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவை அகற்ற தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த எண்ணெய் கசிவால் காட்டுக்குப்பம், சிவன்படைகுப்பம், எண்ணூர் குப்பம் முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வ.உ.சி.நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் ஆகிய கடலோர மீனவ கிராம மக்கள் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்படி வலைகள் நாசமடைந்தன.
இதனை கருத்தில் கொண்டு எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2,301 மீனவ கிராம மக்களுக்கு நிவாரண தொகையாக தலா ரூ.12,500 வீதமும் மேலும் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரி செய்திட படகு ஒன்றுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக ரூ.3 கோடி ரூபாய் தொகை ஒதுக்கப்பட்டது. இந்நிவாரணத் தொகையானது பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 4, 6 மற்றும் 7 ஆகிய பகுதிகளில் உள்ள 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம் மொத்தம் 5 கோடியே 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்ததொகை அந்தந்த மீனவ குடும்பங்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உளளது.