Share via:
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள சமாதானபுரத்திற்கு சென்ற சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மக்களை சந்தித்து அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பொது மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டங்களில் மழைவெள்ள பாதிப்புகளை பார்வையிட பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி நகரப்பகுதிகளின் உள்ள சிந்து முன்துறை, முக்கூடல் சிவகாமிபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், மக்களை சந்தித்தார். அவர்களுடன் கலந்துரையாடிய அவர், மக்களின் பாதிப்புகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் பொதுமக்களின் துயர் துடைக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய நிவாரணப் பொருள்களையும் வழங்கினார்.