Share via:
நடிகை விந்தியா மற்றும் ஐடி விங் ராஜ் சத்யனுக்கும் எம்.பி. சீட்
வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக
வேட்பாளர்களாக மூத்த வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. செய்யூர் தனபால்
ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கான தேர்தல் வரும்
ஜூன் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர்களாக பி. வில்சன், கவிஞர்
சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்
ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவின் என்.சந்திரசேகரன் மற்றும் அதிமுக அணியில் இருந்த பாமக
தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரது பதவிக் காலம் முடிவடைந்தது. இதனால் 2 மாநிலங்களவை
வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுக தீவிரமாக இருந்தது. அதிமுகவில் மூத்த வழக்கறிஞர்
இன்பதுரை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செம்மலை, நடிகை விந்தியா, ராஜ்சத்யன், மாஜி
அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அதிமுகவின் வேட்பாளர்களை அக்கட்சியின் மூத்த தலைவர்
கேபி முனுசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்களாக
மூத்த வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. செய்யூர் தனபால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவில் மூத்த வழக்கறிஞரும் கிறிஸ்தவரான பி.வில்சனுக்கு மீண்டும்
வாய்ப்பு தரப்பட்டது. அதே பாணியில் அதிமுகவும் மூத்த வழக்கறிஞரும் கிறிஸ்தவருமான இன்பதுரையை
வேட்பாளராக அறிவித்துள்ளது. அதிமுகவில் பதவிக் காலம் முடிவடையும் எம்பி சந்திரசேகரன்,
அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால் ஆதி திராவிடர், தேவேந்திர குல வேளாளர் சமூகங்களைச்
சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்களான செய்யூர் தனபால், சதன் பிரபாகரன், சங்கரன்கோவில்
ராஜலட்சுமி ஆகியோரது பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
இதில் செய்யூர் தனபால் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
செய்யூர் தனபால் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். 1991 – 1996 ஆட்சியில் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக
இருந்தவர் தனபால். அதற்கு பிறகு 2001 – 2006ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட பஞ்சாயத்து
தலைவராகவும் தனபால் இருந்து இருக்கிறார்.
கடந்த 30-ம் தேதி இரவு 8.30 மணி அளவில் சென்னை பசுமைவழிச் சாலையில்
உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு தேமுதிக பொருளாளர்
எல்.கே.சுதீஷ் திடீரென வருகை தந்தார். பின்னர், சுதீஷ் சுமார் ஒன்றரை மணி நேரம் எடப்பாடி
பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது எடப்பாடி பழனிசாமி, ‘நாங்கள் நேரடியாக உங்களுக்கு
எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை. அடுத்த முறை ராஜ்யசபா சீட் தருகிறோம்’ என சமாதானப்படுத்தினார்.
இந்த நிலையில் பிரேமலதா என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியவில்லை.