Share via:
கடந்த 3 மாதமாக போலீஸ் வசம் இருக்கும் தனது மொபைல் போனை வாங்கிக்கொடுத்துவிட்டால் தான் இனி தமிழகத்திற்கே வரப்போவதில்லை என்று நடிகை விஜயலட்சுமி போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், நடிகை விஜயலட்சுமி விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நடிகை விஜயலட்சுமி எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த வீடியோவில், ‘‘கடந்த 2011ல் சீமானுக்கு எதிராக நான் கொடுத்த ஆதாரங்களை போலீசார் அழித்துவிட்டனர் என்னிடம் திருப்பித்தரவில்லை. அதற்கடுத்து ஆகஸ்டு 28ம் தேதி சீமான் மீது மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்தேன். இது தொடர்பாகவும் எனக்கு நிறைய அநியாயம் நடந்துவிட்டது. நவம்பர் 28ம் தேதியுடன் 3 மாதங்களாகிறது. ஆனால் நடவடிக்கை எதுவும் போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
ஒரு வேளை மக்களைத் தேர்தல் நெருக்கத்தில் என்னுடைய வழக்கை பயன்படுத்தி சீமானுக்கு எதிராக டிராமா போட திட்டமிட்டிருந்தால் அதற்கு ஒத்துழைக்கு எனக்கு மனசு கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய செல்போன் கடந்த 3 மாதங்களாக போலீஸ்வசம் உள்ளது. அந்த போனில் எனது சகோதரியின் மருத்துவ தகவல்கள் இருக்கின்றன. எனவே உடனடியாக அந்த செல்போனை கொடுத்துவிட்டால் இனி தமிழகத்திற்கே திரும்பி வரமாட்டேன் என்றும், தமிழகத்தில் சீமானை தட்டிக் கேட்கும் யோக்கியதை யாருக்கும் கிடையாது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.