Share via:
’இந்தி மொழியைக் கத்துக்கோங்க’ என்று இண்டியா கூட்டணியில் இருந்துகொண்டே
குழப்பம் விளைவித்த நிதிஷ்குமார் இப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துகொண்டு 9வது முறையாக
முதல் மந்திரி பொறுப்புக்கு வந்திருப்பது இந்தியா முழுக்க ஆச்சர்ய அலையை எழுப்பியிருக்கிறது.
ஒரு மனிதர் பதவிக்காக எத்தனை முறை பல்டி அடிக்க முடியும் என்பதில்
நிதிஷ் பலே சாதனை படைத்துவிட்டார் என்று அத்தனை கட்சியினரும் அவரை கிண்டல் செய்துவருகிறார்கள்.
ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்
நிதிஷ்.
பீகாரில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா
தளம், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாகட்பந்தன் கூட்டணி ஆட்சி நடந்தது. ஆனால் திடீரெனறு
ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்த நிதிஷ் குமார், ‘‘மாநிலத்தில்
மகாகட்பந்தன் கூட்டணியிலும் இந்தியா கூட்டணியிலும் அதற்கான அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை.
எனவே இரு கூட்டணிகளில் இருந்து விலக முடிவு செய்தேன். கட்சியில் அனைவரிடமும் ஆலோசனை
கேட்ட பிறகுதான் இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டது’’ என்றார். இதன் மூலம், ஐக்கிய
ஜனதா தளம், ஆர்ஜேடி, காங்கிரஸ் இடையேயான மகாகட்பந்தன் கூட்டணி அரசு 18 மாதத்தில் கவிழ்ந்தது.
அதே சமயம், 45 எம்எல்ஏக்கள் கொண்ட நிதிஷ் குமாருக்கு 78 எம்எல்ஏக்களை கொண்ட பாஜ கட்சி
ஆதரவு அளித்தது.
காலையில் முதல்வர் பதவியை நிதிஷ் ராஜினாமா செய்த நிலையில், மாலையில்
புதிய அரசு பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடந்தது. 9வது முறையாக நிதிஷ் குமார்
பீகார் முதல்வராக பொறுப்பேற்றவருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணமும்,
ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நிதிஷுடன் துணை முதல்வர்களாக பாஜவின் சாம்ராட்
சவுத்ரி, விஜய் குமார் சின்கா ஆகியோர் பொறுப்பேற்றனர்.
இந்த பல்டி குறித்து தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர்,
‘‘நிதிஷ் தந்திரமான நபர். இப்போதைய அவரது இந்த பாஜ உடனான கூட்டணி வரும் 2025 சட்டப்பேரவை
தேர்தல் வரை கூட நீடிக்காது. இதற்கெல்லாம் பீகார் மக்கள் வட்டியும் முதலுமாக சேர்த்து
திருப்பித் தருவார்கள். 2025 பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம்
20 தொகுதிக்கு மேல் ஜெயிக்காது. அப்படி ஜெயித்துவிட்டால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்கிறேன்’’
என்று சவால் விட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி பீகாரில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
இந்த விஷயத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த அதிரடி அரசியல் நடந்துள்ளது
என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் லாலு பிரசாத்தின் மகள்
ரோகிணி ஆச்சார்யா தனது டிவிட்டர் பதிவில், ‘‘குப்பை மீண்டும் குப்பைத் தொட்டிக்குள்
செல்கிறது. குப்பையின் துர்நாற்றத்தால் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்’’ எனக்கூறி
குப்பை வண்டி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அதேநேரம் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித்
தொடர்பாளர் கே.சி.தியாகி, ‘‘காங்கிரசில் உள்ள சிலர் இந்தியா கூட்டணியின் தலைமை பதவியை
கைப்பற்ற பார்க்கின்றனர். காங்கிரசின் பிடிவாதம் தான் இந்தியா கூட்டணி வீழ்ச்சிக்கு
காரணம். பிராந்திய கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் அளவுக்கு அதிமான இடங்களை காங்கிரஸ்
கேட்கிறது…’’ என்று குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, ‘‘பீகாரில் பொறுப்பேற்றுள்ள புதிய
அரசு முழு அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. பீகார்
மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் தே.ஜ. கூட்டணி
அரசு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளும்’’ என்று கூறியிருக்கிறார்.
சிரிப்பாய் சிரிக்கிறது ஜனநாயகம்.