பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தையடுத்து சென்னை மாநகர கமிஷனராக பணியாற்றிய சந்தீப்ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு கூடுதல் டி.ஜி.பி. அருண் நியமிக்கப்பட்டார். அதே போல் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமினம் செய்யப்பட்டார்.

 

 

கடந்த (ஜூலை)5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  இதைத்தொடர்ந்து 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் உண்மையான கொலையாளிகள் கிடையாது என்று தி.மு.க. கூட்டணியில் இருக்கும் விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளிப்படையாக குற்றம்சாட்டினார்.

 

இதை கையில் எடுத்துக் கொண்ட அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட தி.மு.க.வுக்கு எதிரான கட்சிகள் தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அழுத்தம் கொடுத்தது. இதைத்தொடர்ந்து வடசென்னை காவல் ஆணையர் உட்பட பல்வேறு போலீஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

 

இந்தநிலையில் சட்டம ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. யாக நியமனம் செய்யப்பட்ட டேவிட்சன் தேவாசீர்வாதம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவல் நிலையங்களில் எஸ்.ஐ.க்கள்முதல் டி.எஸ்.பி.க்கள் வரையிலான அதிகாரிகள் இனி கட்டாயம் கைத்துப்பாக்கியை வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அதேபோல் லத்தி, கைத்துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் இனி வரும் காலங்களில் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்களின் பணித்திறனுக்கு ஏற்ப அவர்களுக்கு பணியிட மாறுதல்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அரசியல் ரீதியான புகார்கள் மீது எந்த தயக்கமும் இல்லாமல் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கக் கூறிய அவர், அனைத்து வழக்குளிலும் உண்மை குற்றவாளிகளை மட்டுமே கைது செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link