Share via:
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் கசிந்தது உண்மைதான் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக் கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் 5ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து அதன் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டதில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டன.
அதன்படி இத்தேர்வில் 1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. அதே போன்று வினாத்தாள் கசிவு, பல லட்சங்களுக்கு வினாத்தாள் விற்பனை மற்றும் 67 மாணவர்களுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியது வெளிச்சத்திற்கு வந்தது.
இதனால் தேர்வர்கள் மற்றும் கல்வி நிபுணர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், நடைபெற்று முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யு, மறுதேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் தேசிய தேர்வு முகமையும், மத்திய அரசும் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்றும், மத்திய அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்துள்ள நிலையில், அவை பள்ளிகளில் உள்ள நகல் எடுக்கும் எந்திரங்கள் மூலம் பிரதி எடுத்துக்கப்பட்டுள்ளது. அதே போல் மே4ம் தேதி டெலிகிராம் என்னும் இணையத்தில் விடைகளுடன் சேர்ந்த வீடியோவாக பகிரப்பட்டுள்ளது என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இதை ஒப்புக்கொள்கிறீர்களா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பிய போது, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது உண்மைதான் என்று மத்திய அரசு ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செயயப்பட்டுள்ள நிலையில், வினாத்தாள் கசிவால் பயனடைந்த மாணவர்கள் யார் யாரென்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.