Share via:
நீட் தேர்வு பயிற்சி மாணவர் தோல்வி பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் தேர்வுகளுக்கு தயாராவதற்கு நீட் தேர்வு மையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். அதன்படி லட்சக்கணக்கான மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் போது ஒரு சிலர் அழுத்தம் மற்றும் தோல்வி பயம் காரணமாக தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து விடுகின்றனர்.
அந்த வகையில் நீட் தேரவு பயிற்சி பெற்ற மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராஜஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்காளத்தில் இருந்து போரித் என்ற மாணவர் ராஜஸ்தான் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க சென்றிருந்தார். அவர் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்து பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை மாணவன் போரித், அவருடைய அறையில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். பின்னர் போரித்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையின்படி இதுவரை எந்த கடிதமும் கைபற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டில் இது 28வது தற்கொலை என்றும், இந்த கோட்டாவில் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் நடப்பாண்டில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலை என்பது எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பதை மாணவர்களின் பெற்றோரும், கல்வி நிறுவனத்திலும் அவர்களுக்கு அடிக்கடி வலியுறுத்துவது தற்போது முக்கிய பணியாக மாறியுள்ளது.