Share via:

வருங்கால முதல்வர் நயினார் நாகேந்திரன் என்று அச்சடிக்கப்பட்ட
போஸ்டர்கள் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் எடப்பாடி
பழனிசாமிதான் முதல் அமைச்சர் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருக்கும் விவகாரம் பா.ஜ.க.வினரை
அவேசப்படுத்தியிருக்கிறது.
தமிழக பாஜவுக்கு புதிய தலைவராகி இருக்கும் நயினார் நாகேந்திரனை,
‘வருங்கால முதல்வரே’ என குறிப்பிட்டு, வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன. இந்த விஷயம்
எடப்பாடி பழனிசாமி தரப்பினரை எரிச்சலூட்டியது. இந்த நிலையில் நயினார் நாகேந்திரன்,
‘’நாம் வெளிப்படுத்தும் விளம்பர வாசகங்கள் நம் கட்சியையும், கூட்டணியும் பலப்படுத்த
அமைய வேண்டுமே தவிர எந்த தனி நபரையும் காயப்படுத்தக்கூடாது. தேசிய ஜனநாயக் கூட்டணி
என்பது நம் பலம் அது குறித்த அனைத்து முடிவுகளையும் தேசியத் தலைமை முடிவு செய்து நமக்கு
அறிவிப்பார்கள், கட்சியின் வளர்ச்சியை நோக்கிய நம் பயணத்தில் யாரும் கூட்டணி மற்றும்
நம் எதிர்கால ஆட்சி குறித்த கருத்தாக்கங்களை பதிவு செய்யக் கூடாது என்று அன்புடன் வேண்டுகிறேன்.
வருங்கால முதல்வர், வருங்கால துணை முதல்வர் என என்னை அழைக்கக்கூடாது.
நான் பொறுப்பேற்று நான்கு நாட்கள் தான் ஆகிறது. என்னுடைய பதவி எந்த நேரத்திலும் போய்விடலாம்.
எனவே, பாரத்மாதா கி ஜே, ஜெய்ராம் என்றுதான் முழக்கமிட வேண்டும். எடப்பாடி பழனிசாமியே
முதல்வராக இருப்பார்’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து அ.தி.மு.க.வினர், ‘’நயினார் நாகேந்திரன் பொறுப்பாகப்
பேசியிருக்கிறார். இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு விசுவாசமாக நடந்துகொண்டால் பா.ஜ.க.வின்
எதிர்க்கட்சித் தலைவராக நயினார் நாகேந்திரன் இருப்பார்’’ என்று பாராட்டுகிறார்கள்.
அதேநேரம் பா.ஜ.க.வினர், ‘’தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கவேண்டும்
என்று அண்ணாமலை அரும்பாடு பட்டார். இப்போது எடப்பாடி பழனிசாமியின் அடிமை போன்று நயினார்
நாகேந்திரன் மாறிவிட்டார். இந்தியாவிலே மிகப்பெரிய கட்சியான பா.ஜ.க.வை நயினார் நாகேந்திரன்
அவமானப்படுத்துகிறார். முதல்வர் வேட்பாளர் யார் என்று அமித்ஷா முடிவு செய்ய வேண்டும்.
நயினாருக்கு அப்படி பேச உரிமையில்லை’’ என்கிறார்கள்.
உடன்பிறப்புகளோ, ‘இப்பவே ஆட்சி அமைஞ்ச மாதிரி செட்டப் பண்றதை கொஞ்சம்
நிறுத்துங்கப்பா… காதுல ரத்தம் வருது’ என்கிறார்கள்.