Share via:
என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ‘நாங்கள் என்ன செய்தாலும்
அது சீமானுக்குத் தெரியும், அவரது முழு கட்டுப்பாட்டில் இருக்கிறோம், அவரது கட்டளைப்படியே
செயல்படுகிறோம்’ என்று சொல்லி சீமானை அவரது நிர்வாகிகள் மாட்டிவிட்டதாக செய்திகள் கசிகின்றன.
கடந்த 2ம் தேதி தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கிய
நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், கோவை ரஞ்சித், இசை மதிவாணன்,
பாலாஜி, முருகன் ஆகியோரது வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில்
லேப்டாப், செல்போன்கள், சிம்கார்டுகள், பென்டிரைவ் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டன.
வெளி நாடுகளில் வசிக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினருடன் தொடர்பில்
இருந்ததாகவும், நிதி வசூலித்தாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆதாரங்களின்
அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு என்ஐஏ அதிகாரிகள்
சம்மன் அளித்தனர்
இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை
துரைமுருகன், மதிவாணன் மற்றும் முருகன் ஆகியோர் என்ஐஏ அலுவலகத்தில் தங்களது வழக்கறிஞர்களுடன்
ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து இடும்பாவனம்
கார்த்திக் மற்றும் விஷ்ணு ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகினர்.
ஒவ்வொரு நபரிடமும் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை
நடத்தப்பட்டு சுமார் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில்
ஆயுதக் குழு அமைக்க முயற்சி செய்யப்படுகிறதா? செல்போன் அழைப்புகள் அழிக்கப்பட்டது ஏன்
என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
எல்லா கேள்விகளுக்கும், ‘அண்ணன் சீமான் மீது முழு நம்பிக்கை
வைத்து பயணித்து வருகிறோம். அவருக்குத் தெரியாமல் நாங்கள் எதுவுமே செய்வதில்லை. எல்லாம்
அவரது கட்டளைக்கு ஏற்ப செய்கிறோம்’ என்றே கூறியிருக்கிறார்கள்.
கட்சியில் சாட்டை துரைமுருகன் செய்துவரும் உள்ளடிக்கு முடிவு
கட்டுவதற்காகவே, அவரை சீமான் மாட்டிவிட்டதாக சொல்லப்பட்டது. இப்போது என்.ஐ.ஏ.விடம்
அதற்கு பதிலடியாக சீமானை மாட்டிவிட்டுள்ளாராம் துரைமுருகன்.
எனவே, விரைவில் சீமானுக்கு சம்மன் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகவே
கருதப்படுகிறது.