Share via:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இசைஞானி இளையராஜாவை கோவில் கர்ப்பகிரகத்திற்குள் விடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
மார்கழி மாதம் இன்று (டிசம்பர் 16) பிறந்ததை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் களைகட்டின. இந்நிகழ்ச்சிக்கு இசைஞானி இளையராஜா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். இந்நிகழ்ச்சிக்கு சடகோபர் ராமானுஜ ஜீயர், ஸ்ரீராமன் நாராயண ராமானுஜ ஜீயர் உள்ளிட்டோர் தலைமை தாங்கினார்கள்.
இதில் இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆண்டாள் சன்னிதி, நந்திவனம், பெரிய பெருமாள் சன்னதிகளில் சாமிதரிசனம் செய்தார். அப்போது ஆண்டாள் கோவில் கருவறைக்கு செல்ல முயற்சித்த அவரை நிறுத்தி, அர்த்த மண்டப படியிலேயே நிற்க வைத்து சாமி தரிசனம் செய்ய வைத்துள்ளனர். மேலும் அங்கு நின்றபடியே அவர் அறநிலையத்துறை அளித்த மரியாதையை ஏற்றதாகவும் தகவல்கள் இணையத்தில் பரவின.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இந்து சமய அறயநிலையத்துறை இணை ஆணையர் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘‘இத்திருக்கோவில் முதல்நிலை செயல் அலுவலர் மற்றும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு கூட்டுப்பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
கோவிலுக்குள் மரபு படியும் பழக்க வழக்கங்களின்படியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோவிலின் அர்ச்சகர், மடாதிபதிகள் தவிர மற்ற நபர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. எனவேதான் இளைஞானி இளையராஜா, ஸ்ரீஸ்ரீஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகளுடன் வந்த போது அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது மற்ற ஜீயர் சுவாமிகள் கேட்டுக் கொண்டதின் பேரில் அங்கேயே நின்றபடி சுவாமி தரிசனம் செய்து கோவில் நிர்வாகத்தின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மட்டும் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.