Share via:
ஆட்சி குறித்தும்
புதிய சட்டங்கள் அறிமுகம் குறித்தும் நேரடியாக பிரதமரை சந்தித்துப் பேசவும், விளக்கம்
பெறவும் முடிந்தது என்றால், அது கடைசியாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டம்
தான். அதன் பிறகு 11வது ஆண்டாக பிரதமர் பதவியில் இருக்கும் மோடி, இது வரை ஒரே ஒரு முறை
கூட பத்திரிகையாளர்களை சந்தித்தது இல்லை என்பது தான் வரலாற்றுத் துரோகம்.
மோடி ஆட்சிக்கு வருவதற்கு
மன்மோகன் சிங் மீது ஏகப்பட்ட அவதூறுகளை அள்ளித் தெளித்தார்கள். 2ஜி, நிலக்கரி ஊழல்களில்
எல்லாம் மன்மோகன் சிங் ஆட்சி மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு
முன்பு நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். “சமகால
ஊடகத்தை காட்டிலும் வரலாறு என்னை கனிவுடன் நினைவுகூரும்” என்று கூறினார்.
அப்படித் தான் இப்போது
உலகம் மன்மோகன் சிங்கை வரலாற்ரு நாயகனாக உலகம் சித்தரிக்கிறது. 100 நாள் வேலைத்திட்டம், இலவச மற்றும் கட்டாயக் கல்வி,
தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம், உணவு பாதுகாப்புச் சட்டம் என கோடிக்கணக்கான ஏழை
எளிய மக்களுக்கு பயன்படும் எண்ணற்ற திட்டங்களுக்காக வரலாறு மன்மோகனுக்கு பொன் மகுடம்
சூட்டுகிறது.
1991 தேர்தலுக்கு
முன்பு அதலபாதாள நிலையில் இருந்த இந்திய பொருளாதாரத்தை உலக நாடுகளோடு இணைந்த ஒரு பொருளாதார
பாதையை தேர்வு செய்து தொலைநோக்கு சிந்தனையோடு அன்று நிதியமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன்
சிங் எடுத்த முடிவின் காரணமாகவே புதிய பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தியா
வளர்ச்சிப்பாதையில் செல்ல ஆரம்பித்தது.
காங்கிரஸ் தலைமையிலான
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004இல் மத்தியில் ஆட்சி அமைந்த பிறகு 2014 வரை 10
ஆண்டு காலம் சுதந்திர இந்திய வரலாற்றில் காணாத வளர்ச்சியையும், சாதனைகளையும் நிகழ்த்தியவர்
அன்று பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங். கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா
திண்டாட்டத்தை போக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அறிமுகம்
செய்து ஆண்டுக்கு 100 நாள் வேலை வாய்ப்பை வழங்கி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை
வளர்த்தவர்.
6 முதல் 14 வயதுடைய
அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி பெறும் உரிமைச்சட்டம், 87 கோடி ஏழை எளிய மக்களுக்கு
பயன்தரும் வகையில் உணவு பாதுகாப்புச்சட்டம், விவசாய கடன், கல்விக்கடன், அரசு நிர்வாகத்தின்
அனைத்து முடிவுகளும் சாதாரண மக்களும் அறிந்துகொள்கிற வகையில் தகவல் அறியும் உரிமைச்
சட்டம், நாடு முழுவதும் மத்திய உணவுத் திட்டம், நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு
வழங்கும் நிலம் கையகப்படுத்துதல் சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயவிலை,
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை தடுக்க அரசு மானியம், தேசிய ஊரக சுகாதார இயக்கம்
என டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியின் சாதனைகள் ஏராளம்.
தகவல் தொழில்நுட்ப
வளர்ச்சி, நெடுஞ்சாலை, துறைமுகம் என கட்டமைப்புகளை ஏற்படுத்தி அந்நிய முதலீட்டை ஈர்த்து
வேலைவாய்ப்பை பெருக்கியவர். டாக்டர் மன்மோகன் சிங் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியபோது
எதிர்கால வரலாறு என்னிடம் கனிவாக இருக்கும் என்று பதில் கூறியது காலத்தால் உறுதி செய்யப்பட்டது.
உலகத்தின் தலைசிறந்த பொருளாதார நிபுணர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டு சர்வதேச அளவில்
பெரும் மதிப்பை பெற்றவர்.
இன்றைக்கு இந்தியாவில்
ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் டாக்டர் மன்மோகன் சிங். டாக்டர்
மன்மோகன் சிங் தமது ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளினால் இந்திய மக்கள் அனைவரையும் டாக்டர்
மன்மோகன் சிங் அவர்களின் மறைவினால் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
மருத்துவ சிகிச்சையில்
இருந்த 91 வயதில் கூட வீல் சேரில் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து, மோடியின் தீர்மானங்களுக்கு
எதிராக வாக்கு செலுத்திய ஜனநாயகவாதி. அன்னாரின் நினைவைப் போற்றுவோம்.