Share via:
தமிழக வெற்றிக்கழகக் கொடி அறிமுக விழா இன்று சென்னை பனையூரில், பெற்றோர் மற்றும் கட்சி நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் மத்தியில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு கட்சிக்கொடியையும், கட்சிப்பாடலையும் அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்தினார்.
அப்போது விழாவில் கலந்து கொண்ட தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா மலர்ந்த முகத்துடன் மகன் விஜய் மேடையில் பேசியதை பார்த்து நெகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும் மேடையில் பேசிய அவர் தன்னுடைய தாய் மற்றும் தந்தை குறித்து பேசினது பல சர்ச்சை பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்தது. ஏற்கனவே தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்திற்கு தந்தை மற்றும் தாயை அழைத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலானது.
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழக வெற்றிக்கழகம், தனது முதல் மாநாட்டை எவ்வாறு மற்றும் எங்கே நடத்தப் போகிறது என்பது குறித்த விவரம் கூடிய சீக்கிரம் வெளியிடப்படும் என்று சொன்ன விஜய், கட்சிக்கொடியில் மறைந்திருக்கும் ரகசியத்தை அந்த மாநாட்டில் வைத்து வெளிப்படுத்துவேன் என்றும் பேசினார்.
இந்நிலையில் விழாவில் கலந்து கொண்ட விஜய்யின், தாய் ஷோபா பேசும்போது, தமிழக வெற்றி கழகக் கொடியை வெறும் கட்சிக்கொடியாக நான் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் வருங்கால வெற்றிக்கான கொடிகையாகவே பார்க்கிறேன். கட்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விரைவில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு எப்போது நடக்கும் என்பது குறித்த தேதி அறிவிக்கப்படும் என்று பேசினார்.
இந்நிலையில் விஜய்யின் தாய் ஷோபா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘இப்போது போல எப்போதும் உண்மையாக இரு விஜய். நாட்டுக்கே ராஜா என்றாலும், எனக்கு பிள்ளை. தமிழ்மொழியின் பாரம்பரியம் போற்று. பெண்ணியம் காப்பாற்று. புரட்சிகர திட்டங்களை தீட்டு, வானில் பறக்கும் உன் கொடி உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் ஒரு சி.எம்.(செலப்ரிட்டி மாம்) இனி நான் ஒரு பி.எம். (பாப்புலர் மதர்) என்று தெரிவித்துள்ளது லைக்குகளை அள்ளி வருகிறது.