Share via:
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான 24நாள் போரில் இதுவரை 9,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 7ம் தேதி (அக்டோபர்) இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் வான்வழி, தரைவழி என தாக்குதல்களை மேற்கொண்டு காஸாவை தரைமட்டமாக்கிவிட்டது. இதில் மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் என பாரபட்சமின்றி இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது. உணவு, தண்ணீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.
இதற்கிடையில் அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட டிரக்குகள் தற்போது காஸாவுக்குள் நுழைந்து மக்களின் வேதனையை போக்க தயாராகிக் கொண்டிருக்கிறது.
24 நாட்கள் போரில் இருதரப்பிலும் அதிகளவு உயிர் பலி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் இரு தரப்பிலும் இதுவரை 9,587 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நாவில் கொண்டு வந்த போர் நிறுத்த தீர்மானத்தையும் இஸ்ரேல் புறக்கணித்து, ஹமாஸ் அமைப்பை மண்ணோடு மண்ணாக்குவது என்ற கருத்தில் உறுதியாக உள்ளது. ஒரு பக்கம் மக்களின் மரண ஓலம். இதே நிலை நீடித்தால் இருதரப்பு போர், மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்துவிடும் என்ற அச்சத்தை தெரிவிக்கிறார்கள் சர்வதேச அரசியல் வல்லுனர்கள்.

