Share via:
பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்த நிறுத்த எல்லா இடங்களுக்கும் சினிமா கதாநாயகர்கள் வந்துவிட முடியுமா? தற்காப்புக் கலையும், தனி மனித ஒழுக்கமும், பெற்றோர்களின் சரியான வளர்ப்புமே இதுபோன்ற குற்றச்சம்பவங்களை நடக்காமல் தடுக்க முடியும்.
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் தவுலா என்ற கிராமம் அமைந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் சிறுமியை மிரட்டி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளர். பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.
அப்போது அங்கு வந்த சில குரங்குகள் அந்த நபரை கடித்து குதறியுள்ளது. வலி தாங்க முடியாத அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். உடனே சிறுமி அங்கிருந்து தன்னுடைய வீட்டிற்கு ஓடி வந்து நடந்த அனைத்தையும் கூறி அழுதுள்ளார். உடனே இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை போலீசார் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குரங்குகள் மூலம் சிறுமி பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதி மக்களால் அந்த குரங்குகள் நிஜஹீரோக்களாகவும், கடவுளின் அவதாரமாகவும் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.