Share via:
டெல்லியில் நோயாளி ஒருவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
டெல்லியில் எம்பாக்ஸ் வைரஸ் எனப்படும் குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு முக்கிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நபர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று கூறியிருந்தது. மேலும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருந்து வரும் நிலையில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதார செயலாளர் அபூர்வ சந்திரா, இன்று (செப்.9) வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார நிறுவனம் எம்பாக்ஸ் வைரசை பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைரலாஜியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு எந்த மாதிரிகளிலும் இதுவரை எம்பாக்ஸ் பாசிட்டிவ் என்று உறுதியாகவில்லை என்றாலும், இந்தியாவில் வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்குமான தேவையான உடனடி உத்திகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
சந்தேகத்திற்கிடமான நபர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். போதுமான பயிற்சி பணியாளர்களுடன் மருத்துவமனைகள் பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து மாலங்களிலும் இந்த நோய், பரவும் விதம், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டத்திலும் உள்ள மூத்த அதிகாரிகள், சுகாதார வசதிகளில் பொது சுகாதார நிலையத்தை தயார் நிலையில் வைத்திருந்து மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மக்களிடையே தேவையற்ற பீதியை தடுக்க வேண்டியது முக்கியம் என்றும் அந்த ஆலோசனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.