Share via:
சென்னை மயிலாப்பூரில் இயங்கிவந்த உமா மகேஸ்வரி மில்ஸ் லிமிடெட்
நிறுவனத்தில் பணிபுரிந்த 289 ஊழியர்களுக்கு கன்ஸ்யூமர் டியூரபில் லோன் பெற்று, அதனை
திருப்பி செலுத்தாமல் 98.47 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ராமநாதன், வள்ளியம்மாள்,
ராம்மோகன், ரமேஷ், லட்சுமணன், நல்லகண்ணு ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்து இறுதியறிக்கை கூடுதல் சிறப்பு
பெருநகர குற்றவியல் சிசிபி வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த
12 ஆண்டுகளாக மேற்கண்ட எதிரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணை வழங்கப்பட்டு
நிலுவையில் இருந்துவருகிறது.
இந்த நிலையில் பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி
மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையாளர் பி.கே.செந்தில்குமாரியின் அறிவுரைபடி
காவல் துணை ஆணையாளர் ஸ்டாலின் மேற்பார்வையில் குற்றவாளிகளை கைது செய்ய காவல் ஆய்வாளர்
ஹெச்.சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து எதிரிகளை தேடிவந்த நிலையில், 12 வருடங்களாக தலைமறைவாக
இருந்த எதிரி ரமேஷ் என்பவரை தி.நகர் பகுதியில் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது அமெரிக்க
குடியுரிமை பெற்று சென்னை வந்திருப்பது தெரியவந்தது. இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிடியாணையை நிறைவேற்றிய மத்திய
குற்றப்பிரிவின் தனிப்படைக்கு தலைமை தாங்கிய வங்கி மோசடி புலனாய்வு பிரிவின் காவல்
உதவி ஆணையாளர் வி.மனோஜ்குமார் மற்றும் தனிப்படையினரை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டியிருக்கிறார்.