Share via:

விஜய்க்கு தமிழ்நாட்டில் மிகப்பெரும் செல்வாக்கு இருக்கிறது, முதலமைச்சர்
ரேஸில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்று ஒரு சர்வே வெளியானதில் ஆதவ் அர்ஜூனா பெயர்
அடிபட்டது. அவரது சொந்தப் பணத்தில் இப்படியொரு சர்வே செய்து வெளியிட வைத்திருக்கிறார்
என்று கூறப்பட்டது. அந்த சர்வேயில் அண்ணாமலைக்கு உரிய மதிப்பு கொடுக்கவில்லை. அதோடு
முந்தைய பொதுக்குழுக் கூட்டத்தில் அண்ணாமலையை ஆடு என்று கடுமையாக விமர்சனம் வைத்திருந்தார்.
இந்த விவகாரம் பா.ஜ.க.வில் இருக்கும் மார்ட்டின் குடும்பத்தினருக்கு
பெரும் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. இதையடுத்து அவரது மைத்துனரும் லாட்டரி மார்ட்டினின்
மகனுமான ஜோஸ் சார்லஸ் இன்று ஆதவ் அர்ஜூனா செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
அதாவது, பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை குறித்து ஆதவ் அர்ஜூனா தெரிவித்த கருத்தினால்
எங்கள் குடும்பத்திற்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளது. எங்கள் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்
என்று ஒரு குற்றச்சாட்டும் வைத்திருக்கிறார்.
‘’ஆதவ் அர்ஜுனாவுக்கு இருக்கும் பதவி, பொருளாதார பேராசையைத் தீர்த்துக்கொள்ள
பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி அமைத்துக்கொண்டு பல கட்சிகளில் இணைந்துவருகிறார். அவர்
செய்யும் கிறுக்குத்தனங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது தொடரும்
பட்சத்தில் வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். அதோடு அண்ணாமலை
குறித்து ஆதவ் பேசிய விஷயங்களுக்கு தான் மன்னிப்பு கேட்பதாகவும் கூறியிருக்கிறார்.
மாமனார் பணத்தையும் பயன்படுத்திக்கொண்டு தேவையில்லாத விஷயங்கள்
ஆதவ் அர்ஜூனா செய்கிறார் என்று அண்ணாமலை சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டு வைத்தார். அதற்கு
மாமனார் காசில் நான் வாழவில்லை என்று ஆதவ் சொன்னார். அதை உடைப்பதற்காகவே அவரது மைத்துனரை
நேரடியாக ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார்கள். இதையடுத்து, ஆதவுக்கு வழங்கப்படும் பணத்தை
மாமனார் நிறுத்துகிறாராம். இந்த நிலையில் இனி ஆதவ் அர்ஜூனா செலவுக்கு விஜய் பணம் கொடுப்பாரா
அல்லது கட்சியில் இருந்து வெளியே அனுப்புவாரா என்பதே கேள்வியாக மாறியிருக்கிறது.