Share via:
vதிருப்பதி லட்டுவில் மாட்டுக்கொழுப்பு விவகாரம் பற்றி எரிகிறது. இப்போது லட்டுக்குள் குட்கா பாக்கெட், பீடித் துண்டு இருப்பதாக தினம் ஒரு செய்தி வெளியாகிறது. இந்த நிலையில் ஆண்மைக் குறைவு கருத்தடை மாத்திரை பழனி பஞ்சாமிர்தத்தில் கலந்ததாக குற்றம் சாட்டிய சினிமா இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டிருப்பது பா.ம.க. வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
சமீபத்தில் மோகன் ஜி ஒரு வீடியோவில், ‘’நாம பெருசா நினைக்கிற ஒரு
கோவிலில் இருக்கிற பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் மாத்திரைகளை கலந்ததாக
நான் செவி வழியாக கேள்விப்பட்டேன். அந்த நியூஸே வெளியே வராமல் அதை தடுத்து உடனே சரி
செய்து வேறு ஒரு கேஸ் மாதிரி போட்டு மொத்த பஞ்சாமிர்தத்தையும் அழிச்சுட்டாங்கனு கேள்விப்பட்டேன்.
தரமில்லாத விஷயத்தை மக்களுக்கு தெளிவாக சொல்லவில்லை. அங்கு வேலை செய்பவர்கள், சுத்தி இருப்பவர்கள்
என்னிடம் சொன்னதாவது, கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தியிருக்காங்க. உள்ள வேலை செய்யும்
யாரோ இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தணும்னு சொன்னாங்க. இந்த மாதிரியான விஷயம் எல்லா
இடங்களிலும் நடக்கிறது’’ என்றார்.
இந்துக்களின் எண்ணிக்கை குறைப்பதற்காக பஞ்சாமிர்தத்தில் கருத்தடை
மாத்திரை கலப்பதாக பேசிய விவகாரம் செம வைரலானது. இதையடுத்து, இந்த பொய் செய்தி பரப்புபவர்
மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இதையடுத்து,
சென்னை காசிமேட்டில் இருக்கும் இல்லத்தில் வைத்து மோகன் ஜி. இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியிருக்கும் மோகன்
ஜி அடுத்த படத்தை இயக்கிவருகிறார். பா.ம.க.வுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் கருத்துக்களைப்
பேசிவருபவர். இந்த விவகாரத்துக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ம.க.வினர்,
‘’’இயக்குனர் மோகனை திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.. எதற்காக கைது செய்கிறோம்
யார் கைது செய்கிறோம் என்பதை கூட தெரிவிக்காமல் ஒரு பிரபலமான இயக்குனரை கைது செய்வது
என்ன காவல்துறையின் நேர்மை… காலையிலிருந்து வடக்கு மண்டல ஐஜி அலுவலகம், சென்னை மாநகர
ஆணையர் அலுவலகம், தாம்பரம் மாநகர ஆணையர் அலுவலகம், கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம்
உள்ளிட்ட உயர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டும் கண்டறிய முடியாமல் மர்மம் நீண்டு கொண்டே
செல்கிறது’’ என்று கொதித்திருக்கிறார்கள்.