Share via:
மோடியின் ஆட்சியில் தமிழக மீனவர்களை தொட்டுப் பார்க்கும் தைரியம்
கூட இலங்கைக்கு வராது என்று பா.ஜ.க.வினர் உறுதி அளித்தார்கள். ஆனால், மீனவர்கள் கைது
செய்யப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் தொடர்ந்து நடந்துவருகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்கக்
கோரியும், கைது நடவடிக்கையை நிறுத்தவும் மீனவர்கள் போராட்டம் செய்துவருகிறார்கள். இந்த
போராட்டத்தினரை சந்தித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘’ராமேஸ்வரத்துக்கு இன்று நான்
சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச்
சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன். கச்சத்தீவு சுற்றுவட்டார
கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும்
தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன. அன்றிலிருந்து
இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது..’’ என்று நைசாக
பழியை மாநில அரசு மீது போட்டு தப்பிவிட்டார்.
இந்த நிலையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ‘மீனவர்கள் கைதுக்கு விரைவில்
முடிவு எடுப்போம். அதேநேரம், மீனவர்கள் போர்வையில் சமூகவிரோதிகள் கடத்தல் செய்கிறார்கள்.
இதை நாம் மறுக்கவே முடியாது’ என்று மீனவர்களையே குற்றவாளி ஆக்கியிருக்கிறார்.
ஆளுநருக்கு பதில் அளித்திருக்கும் அமைச்சர் ரகுபதி, ‘’கடந்த மக்களவைத்
தேர்தலில், ‘அறிவியல் பூர்வமாகவும், சட்டப்படியும் அணுகி கச்சத்தீவைக் கண்டிப்பாக மோடி
அரசு மீட்கும்” என்று சொன்னவர்கள் எங்கே போனார்கள்? கச்சத் தீவு பற்றிய கப்ஸா கதைகளை
பேசுவதை நிறுத்துங்கள் ஆளுநரே! இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட நமது மீனவர்களை விடுதலை
செய்ய உங்கள் எஜமானர் மோடியிடம் கோரிக்கை வையுங்கள்…’’ என்று காட்டமாக அறிக்கை விட்டிருக்கிறார்.
அதேபோல் நவாஸ் கனி எம்.பி., ‘’ஒன்றிய பாஜக அரசு நினைத்தால் மீனவர்களின்
பிரச்சனைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்திட முடியும், ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும்
எடுக்காத பாஜக, பிரச்சனையை திசை மாற்றும் வண்ணம், பாதிக்கப்பட்ட மீனவர்களையே கடத்தல்காரர்கள்
என்று குற்றம் சாட்டும் வண்ணம், மீனவர்களையே அவமானப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது.
நம்மை விட சிறிய நாடான இலங்கை கடற்படையை கூட கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமாக
நம்முடைய நாட்டை பாஜக மாற்றி இருக்கிறதா? ஒட்டுமொத்த மீனவர்களையும் இழிவுபடுத்தும்
வண்ணம் அவர்களை கடத்தல்காரர்கள் என்ற இதற்கு உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்…’’
என்று கோரிக்கை வைக்கிறார்.
எந்த ஆட்சி வந்தாலும் மீனவர்களுக்கு கண்ணீர் தான் பரிசு போலிருக்கிறது.