Share via:
நண்பர் அதானிக்காகவே பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி நடத்திவருகிறார்
என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்திய
அரசின் அத்தனை சொத்துக்களும் அதானிக்கு எழுதி வைக்கப்படுகின்றன, அனைத்து நாட்டிற்கும்
பயணம் செய்து அதானிக்கு ஆதாயம் திரட்டுகிறார் என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போன்று
அமெரிக்காவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மோடியின் நண்பர் என்று கருதப்படும் டொனால்ட் டிரம்ப் நாட்டில்
மோட்டியின் இன்னொரு நண்பர் அதானிக்குச் சிக்கல் எழுந்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில்
மோசடி செய்ததாக இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி மீது, ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு
250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அதானி மீது
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் புதன்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த
குற்றவியல் வழக்கு, இந்தியாவில் பெரும் அதிர்வை உண்டாக்கியுள்ளது. அந்த குற்றப் பத்திரிகையில்,
20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படும்
தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்திற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, அதானியும்
அவரது மூத்த நிர்வாகிகளும் இந்திய அதிகாரிகளுக்குப் பணம் செலுத்த ஒப்புக்கொண்டதாக வழக்கறிஞர்கள்
குற்றம் சாட்டியுள்ளனர்.
அதானி குழும அதிகாரிகள், அமெரிக்க நிறுவனங்கள் உள்படப் பல தரப்பிடம்
இருந்து கடனாகவும் பத்திரங்கள் மூலமாகவும் மூன்று பில்லியன் டாலர் நிதி திரட்டியதாக
அந்தக் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அதானி மற்றும் அவரது மருமகன்
சாகர் அதானி ஆகியோருக்கு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது..
இந்த கைது வாரண்ட் வெளிநாட்டு சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் அனுப்பப்படும் என்பதால்
மோடி அரசுக்கு பெரும் அவமானம் என்று கூறப்படுகிறது.
தமிழக அரசும் அதானியுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதால் இங்கேயும்
ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த ஊழல் வெடிக்குமா அல்லது மூடி மறைக்கப்படுமா
என்று பார்க்கலாம். இது குறித்து அதானி நிறுவனம் இது வரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.