Share via:
விஸ்வகுரு, அரசியல் சாணக்கியர் என்றெல்லாம் புகழப்பட்ட பாரதப்பிரதமர் மோடி, தன்னுடைய ஆட்சியைத் தக்க வைப்பதற்காக இரண்டு மாநிலக் கட்சிகளிடம் விலை போயிருப்பது இந்த பட்ஜெட்டில் அப்பட்டமாகத் தெரியவந்திருக்கிறது.
ஏனென்றால், இதே பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. அப்போதெல்லாம் ஆந்திரா, பீகாருக்கு பிரத்யேக நிதி ஒதுக்காத மோடி, இந்த முறை ஆட்சியைத் தக்க வைப்பதற்காக இரண்டு அரசுக்கும் மிகப்பெரிய நிதியை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது குற்றமல்ல, அதே கண்ணோட்டத்தில் அனைத்து மாநிலங்களையும் கவனிக்க வேண்டும். ஆனால், தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்காத மாநிலங்களுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவிப்பது போன்று பட்ஜெட் போடப்பட்டுள்ளது. இதுவரை மதத்தின் ரீதியில் மக்களை பிரித்துவந்த பா.ஜ.க அரசு இப்போது வாக்களித்த மாநிலம், வாக்களிக்காத மாநிலம் என்று இந்தியாவை இரண்டாகப் பிரித்திருக்கிறது.
அதனாலே இந்தியாவில் முதன்முறையாக ஒரு பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் தி.மு.க. அரசு கண்டன போராட்டம் நடத்தியிருக்கிறது. தமிழகத்தை முழுமையாக புறக்கணித்திருக்கிறார்கள். குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப்பணிகளுக்கு – இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட துயர் துடைக்க – தொழில் & நகர்ப்புர வளர்ச்சிக்கு என எதற்கும் தமிழ்நாட்டுக்கு நிதியில்லை.
பாடி ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் என்று வடிவேல் டயலாக் போன்று பிரதமர் மோடி பலவீனமான பிரதமராக இருக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து வரி கொடுக்க முடியாது என்று போராடத் தொடங்கும் முன்பு மோடி திருத்திக்கொள்ள வேண்டும், அல்லது திருத்தப்படுவார்.