Share via:
அண்ணாமலையின், ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவையொட்டி, திருப்பூர்
மாவட்டம் பல்லடத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
ஏராளமான மக்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தைப் பார்த்த மோடி ரொம்பவே மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.
அதனாலே அண்ணாமலையின் முதுகில் தட்டி தன்னுடைய பாராட்டைத் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள்
என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ் மாநில
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம்,
இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர், தமிழருவி மணியன், ஜான் பாண்டியன் ஆகியோரை
மட்டுமே காண் முடிந்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறுவார்கள் என்று
சொல்லப்படும் அ.ம.மு.கவின் தலைவர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் மேடையில் பேசிய மோடி வழக்கம் போல் தி.மு.கவைக் கடுமையாக
விமர்சித்துப் பேசியதோடு, அ.தி.மு.கவின் மறைந்த முதலமைச்சர்களான எம்.ஜி. ராமச்சந்திரன்,
ஜெ. ஜெயலலிதா ஆகியோரை புகழ்ந்து பேசியது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
“தமிழ் நாட்டில் பா.ஜ.க. எப்போதுமே ஆட்சியில் இருந்தது இல்லை.
ஆனால், பா.ஜ.கவின் மனதில் தமிழ்நாடு எப்போதுமே இருந்துகொண்டே இருக்கிறது. பா.ஜ.கவின்
பலம் பெருகிவருவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் கொள்ளையடித்து ஆட்சி
நடத்துபவர்கள் பொய்யான தகவல்களைக் கூறி மக்களைத் திசை திருப்புகின்றனர்,” என்றார்.
மேலும் அவர், “நான் தமிழ்நாட்டிற்கு வந்தபோது மறைந்த முதலமைச்சர்
எம்.ஜி.ஆர். என் நினைவுக்கு வந்தார். இலங்கையில் அவர் பிறந்த ஊரான கண்டிக்குச் செல்லும்
வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்று அவர் மக்களுக்காகப் பணியாற்றிய தமிழ்நாட்டிற்கு நான்
வந்திருக்கிறேன்.
“பத்தாண்டு காலம் அவரது நல்லாட்சி காரணமாக சிறந்த கல்வியும் மருத்துவ
வசதிகளும் கிடைத்தன. இதனால், இப்போதுவரை ஏழை மக்கள் ஒவ்வொருவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற
தலைவராக புகழ்ந்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். குடும்ப அரசியலால் அரசியலுக்கு வரவில்லை.
தனிப்பட்ட திறமையின் காரணமாக முதலமைச்சராக வந்தார்.
“இன்று தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரை அவமதிக்கும் விதமாக தி.மு.க.
ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு மறைந்த முதல்வர்
ஜெயலலிதா தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான ஆட்சியைக் கொடுத்தார். தமிழ்நாட்டிற்காகவும் தமிழ்நாட்டின்
மக்களுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அவர் அர்ப்பணித்தார்” என்று பேசினார்.
இதற்கான காரணம் குறித்து பா.ஜ.க. புள்ளிகளிடம் கேட்டபோது, ’’எடப்பாடி
பழனிசாமியை கூட்டணியில் சேர்ப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவே டெல்லி பா.ஜ.க. கருதுகிறது.
அதனாலே இந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பாராட்டிப் பேசியிருக்கிறார்.
அதோடு, பன்னீரையும் தினகரனையும் மேடையில் ஏற்றினால் எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்த
முடியாது என்பதாலே அவர்கள் இருவரும் மேடையில் ஏற்றப்படவில்லை. இன்னும் ஒரு வாரத்தில்
எல்லாம் முடிவுக்கு வந்துவிடும்…’’ என்றார்கள்.
எடப்பாடி பழனிசாமியை விட மாட்றாங்களே…