Share via:
எத்தனை தீவிரமாக சுற்றுப்பயணம் செய்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு
சீட் கிடைக்கப்போவதில்லை எனவே, உத்தரப்பிரதேசம் போன்ற பகுதியில் கவனம் செலுத்தினால்
நல்லது என்று உளவுத் துறை ரிப்போர்ட் கொடுத்ததாகவும், இதையடுத்தே அமித் ஷா சுற்றுப்பயணம்
ரத்து செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தமிழகத்தில்
ஏற்கனவே பிரசாரம் செய்துள்ள நிலையில் அடுத்த வாரமும் பிரசாரம் செய்ய வர இருக்கிறார்.
சென்னையில் ரோடு ஷோ நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை
உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் பாஜகவும், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் பா.ஜ.க.வின்
கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து அமித் ஷா தேர்தல் பரப்புரை செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் 4ம் தேதி மதுரை
வருவதாகவும், தேனி, ராமநாதபுரம், சிவகங்கைக்கு சாலை மார்க்கமாக சென்று ஆதரவு திரட்டும்
அவர், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும்
பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 5ம் தேதி தென்காசி, கன்னியாகுமரியில்
பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், திடீரென இந்த சுற்றுப்பயணம் மாறுதல் செய்யப்பட்டது. அதன்படி
4ம் தேதி இரவு தனி விமானம் மூலம் மதுரை வருவதாகவும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்
தரிசனம் செய்துவிட்டு, சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி தொகுதிகளில் ரோடு ஷோ நடத்த
இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியாக உளவுத்
துறை ரிப்போர்ட்டையே காட்டுகிறார்கள். தற்போது குஜராத், உத்தரப்பிரதேசங்களில் அதிக
கவனம் எடுத்துக்கொண்டால் கூடுதல் தொகுதிகள் ஜெயிக்க முடியும் என்று சொல்லப்பட்டதன்
அடிப்படையில் அங்கே போகிறாராம். ஆனாலும், ஒருசில நாட்கள் கண்டிப்பாக வந்துவிட்டே போவாராம்.