Share via:
ராமருக்குக் கோயில் கட்டினோம் அடுத்து கிருஷ்ணருக்கும் சீதா தேவிக்கும்
கோயில் கட்டுவோம் என்றெல்லாம் கூறிக்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி ஒரு பேட்டியில்
தன்னை ஒரு தெய்வ அம்சமாக நினைப்பதாகக் கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்தில் ஒடிசா மாநிலம் புரி மக்களவை தொகுதி பா.ஜ..க வேட்பாளராக
சாம்பித் பத்ராவுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் பிரதமர் மோடி மிகப்பிரம்மாண்டமான
வாகன பேரணி நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சாம்பித் பத்ரா, ‘புரி
ஜெகந்நாதர் பிரதமர் மோடியின் தீவிர பக்தர்’ என்று பேசினார்.
இதைத் தொடர்ந்து உலகமே போற்றி வணங்கும் ஜெகந்நாதரை இழிவுபடுத்தியதாக
கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்த பேச்சுக்காக சாம்பித்பத்ரா பகிரங்க மன்னிப்புக் கேட்க
வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து சாம்பித்பத்ரா, ‘பிரதமர் மோடி
ஜெகந்நாதரின் தீவிர பக்தர் என்பதைத் தான் அப்படி மாற்றிக் கூறிவிட்டேன். எனது தவறுக்கு
பிராயச்சித்தம் செலுத்தும் வகையில் 3 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன்’ என்றும் பகிரங்க
மன்னிப்பு கோரியிருக்கிறார்.
இந்த நேரத்தில் ஒரு செய்தியாளரிடம் பேசிய பிரதமர் மோடி, ‘நான்
பயாலஜிக்கலா இந்த பூமிக்கு வந்ததா நினைக்கவில்லை. கடவுள்தான் என்ன இந்த உலகத்துக்கு
அனுப்பியிருக்கார். ஏனென்றால் எனக்கு இருக்குற சக்தி பயாலஜியா வராது. கடவுள் கொடுத்தாதான்
வரும்..’ என்று பேசியிருக்கிறார்.
தேர்தல் முடிவதற்குள் நானே ராமரின் அடுத்த அவதாரம், விஷ்ணுவின்
12வது அவதாரம்னு பேச ஆரம்பிச்சுடுவார் போலிருக்கே என்று இந்தியா முழுக்க பகுத்தறிவாளர்கள்
கடும் விமர்சனம் செய்துவருகிறார்கள். வழக்கம் போல் பா.ஜ.க. அறிவுஜீவிகள் கப்சிப் என்று
அமைதி காக்கிறார்கள்.