Share via:
மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு முடிந்திருக்கும் நிலையில், மோடியின்
பிரசார யுக்தியில் முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியை குறை சொல்வதாகவே மாற்றம் அடைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டு ஆட்சியில் அம்பானி, அதானி உள்ளிட்ட
பெரும் கோடீஸ்வரர்களுக்கு பல லட்சம் கோடிகளை வாரிக் கொடுத்தவர். இப்போது அவர்கள் காங்கிரஸ்
கட்சியை ஆதரிக்கத் தொடங்கிவிட்டதாக பேசுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெலங்கானா மாநிலத்தில் மேற்கொண்ட
தேர்தல் பிரச்சாரத்தின் போது, “முன்னதாக 5 தொழிலதிபர்கள் குறித்து ராகுல் காந்தி பேசி
வந்தார். அதன் பிறகு அதானி, அம்பானியை வசைபாட ஆரம்பித்தார். தேர்தல் அறிவிக்கப்பட்ட
பிறகு அவ்விருவரை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.
இரவில் அதானி – அம்பானியை வசைபாடுவதை நிறுத்த அவர்களிடமிருந்து
காங்கிரஸ் எவ்வளவு கருப்புப் பணம் பெற்றது? டெம்போவில் கருப்புப் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
அவர்களுக்குள் ஏதோ ஒப்பந்தம் நடந்திருப்பது போல் தெரிகிறது. காங்கிரஸ் இதற்கு பதில்
சொல்ல வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
’’எங்களுக்கு கருப்புப் பணத்தை அதானியும் அம்பானியும் அனுப்பியிருக்கிறார்கள் என்றால்
இன்னமும் அவர்கள் மீது விசாரணையைத் தொடங்காதது ஏன், அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றை
அனுப்பாதது ஏன்?
அம்பானி, அதானிகளுக்கு மோடி கடன் தள்ளுபடி செய்து நன்மை செய்கிறார்.
நாங்கள் இந்தப் பெருமுதலைகளுக்கு கொடுப்பதற்குப் பதிலாக, ஏழைகள், விவசாயிகள், பெண்கள்,
இளைஞர்களுக்கு நன்மை செய்வோம்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில்
ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, “அதானி குறித்து ராகுல் காந்தி பேசவில்லை
என்று பிரதமர் மோடி கூறுகிறார். உண்மை என்னவென்றால், ராகுல் தினமும் அதானி குறித்த
உண்மையை மக்கள் முன் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார். நரேந்திர மோடிக்கும் தொழில்துறையினருக்கும்
இடையிலான தொடர்பை ராகுல் தினமும் பகிரங்கப்படுத்துகிறார்.’’ என்று கூறியிருக்கிறார்.
கருப்புப் பணம் இல்லாத இந்தியாவை உருவாக்கிக் காட்டுகிறேன் என்று
சவால் விட்ட மோடி இப்போது கருப்புப் பண நடமாட்டம் இருப்பதை அவரே சொல்லியிருப்பதைப்
பார்த்தால், என்னதான் ஆட்சி நடத்தினார் என்ற கேள்வியே எழுகிறது.