Share via:
மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் எதிரொலியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்பை தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையில் சிறு மற்றும் குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி சென்னை, திருப்பூர், கோவை, நாமக்கல், ஈரோடு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தொழில் நிறுவனங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் ரூ.1.50 கோடி இழப்பு ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையின் முடிவில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மேலும் சில சலுகைகளை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.