Share via:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தனது ருத்ரதாண்டவத்தை ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது என்று மகிழ்ச்சியடைய நேரமே இல்லாமல், வீடுகளுக்குள் புகுந்துவிடும் மழைநீரை எப்படி வெளியேற்றுவது, எங்கே தஞ்சமடைவது, வீட்டு உபயோகப் பொருட்களை எப்படி காப்பாற்றுவது என்ற எண்ணமே மக்கள் மனதில் மேலோங்கி வருகிறது.
மழைநீர் வடிகால் பணிகள் என்ற வாதம் முன்வைக்கப்படும் போதிலும், பொதுமக்கள் நெகிழி பைகளையும், நெகிழி பொருட்களையும் ஆங்காங்கே வீசி, மழைநீரை உறிஞ்ச முடியாத அளவுக்கும், நிலத்தடி நீரை தேக்கி வைக்க முடியாத அளவுக்கும் செய்து விடுகின்றனர். வேறு என்னவாகும்? இதே கதிதான் என்று ஒவ்வொரு ஆண்டும் புலம்ப வேண்டியுள்ளது. கார், வேன் வைத்திருப்பவர்கள் அவற்றை அவர்கள் பகுதியில் இருக்கும் மேம்பாலங்களின் மீது வரிசையாக அடுக்கி வைத்த கதைகள் எல்லாம் கூட உண்டு.
இந்நிலையில் வங்கக்கடலில் நேற்று (நவம்பர் 11) மதியம் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் தற்போது நிலை கொண்டுள்ளதாகவும், இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விட்டுள்ள நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேரு மழை குறித்து தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, என்னை பொறுத்தவரை மழை கொஞ்சம் பெய்ய வேண்டும். மழை என்பது ஏரிகள் நிரம்பினால்தான் குடிநீர் தேவை பூர்த்தியாகும். 2 நாள் சிரமத்தை பார்க்காதீர்கள். தமிழகம் முழுவதும் மழை பெய்தால்தான் மக்களுக்கு நல்லது’’ என்று தெரிவித்துள்ளார்.
உண்மையாகவே அமைச்சர் கே.என்.நேரு கூறுவது எல்லாம் சரிதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எதிர்பாராமல் அந்த மழையின் அளவு அதிகரிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழத்தான் செய்கிறது. ஏனென்றால் அவர்களின் முன் அனுபவம் அப்படிப்பட்டது.