Share via:
அனைத்து துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றுள்ள அமைச்சர் உதயநிதி, கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி வார்டனை அதிரடியாக சஸ்பெண்டு செய்துள்ளார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள அனைத்துத் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
அதன்படி நேற்று (செப்.24) கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சென்று விளையாட்டு வீரர்களுக்கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாணவர் விடுதி மாணவர்களை சந்தித்து கலந்துரையாடி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டுநாயகனப் பள்ளியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் விடுதிக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார். மேலும் அங்கிருந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, குடிநீர் மற்றும் மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படைகளை வசதிகளைபற்றி மாணவர்களிடம் தனித்தனியாக கேட்டறிந்தார்.
அதன் பின்னர் விடுதி வார்டன் அறைக்கு சென்று அங்கிருந்த மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு வகைகள் மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள மொத்த பொருட்களின் விவரங்கள் அடங்கிய கோப்புகளை ஆய்வு செய்த போது பல்வேறு குளறுபடிகள் இருப்பதை கண்டறிந்தார்.
அதன் காரணமாக விடுதியின் வார்டனாக செயல்பட்டு வந்த முருகன் என்பவரை குளறுபடிகள் செய்ததற்காக அமைச்சர் உதயநிதி அவரை பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும், தி.மு.க.வின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது