Share via:
தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மரியாதை செய்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் உதயநிதி பளிச்சென்று பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தின் துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார் என்று சமூகவலைதளங்களில் சில மாதங்களாவே பேசப்பட்டு வருகிறது. இதை நிரூபிக்கும் வகையில் நேற்று (செப்.17) நடந்து முடிந்த தி.மு.க.வின் பவளவிழாவில் அதற்கான கோரிக்கைகளும் வைக்கப்பட்டன.
தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவிப்பது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மற்ற அமைச்சர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் ஏதாவது முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் தன் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.
இதைத்தொடர்ந்து மற்றொரு விழாவில் பங்கேற்று விட்டு வெளியில் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள், த.வெ.க. தலைவர் விஜய், தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதில் அளித்து பேசிய அவர், தந்தை பெரியாரை தாண்டி, தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பளிச்சென்று தெரிவித்தார்.