Share via:
இஸ்ரேலில் சிக்கித் தவித்த 14 தமிழர்கள் சென்னை வந்தடைந்துள்ள நிலையில் அனைவரையும் விரைவில் மீட்போம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் பயங்கரவாதிகள் மோதல் சம்பவத்தால் இஸ்ரேலில் தங்கியுள்ள அயல்நாட்டினர் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களை மீட்க அந்தந்த நாட்டு அரசுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதன்படி இந்திய நாட்டின் மத்திய அரசு ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக 212 இந்தியர்களை பத்திரமாக விமானம் மூலம் மீட்டு தாயகம் கொண்டு வந்து சேர்த்தது. அதில் தமிழர்கள் 21 பேரும் மீட்கப்பட்டனர். அவர்களில் 14 தமிழர்கள் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் 7 பேர் கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினர்.
சென்னை வந்து சேர்ந்த தமிழர்களை வரவேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்கள் சந்திப்பில் எஞ்சியுள்ள அனைத்து தமிழர்களையும் விரைவில் மீட்போம் என்று உறுதியுடன் தெரிவித்தார். மேலும் மீட்கப்பட்ட அனைவரும் அவரவர் பகுதிகளுக்கு பத்திரமாக சென்றடைவதை உறுதி செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.