அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா என்று இரண்டு மாபெரும் ஆளுமைகள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு இருந்த நேரத்தில், தனிக்காட்டு ராஜாவாக நுழைந்து எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த்.

ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்ட மதுரை மண்ணின் மைந்தன், விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ். மதுரை திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25ம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த விஜயகாந்த், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

 

சிறு வயது முதல் சினிமா ரசிகர். எந்த ஒரு சினிமாவை பார்த்தாலும், படத்தின் காட்சிகளையும் வசனங்களையும் நண்பர்களிடம் நடித்துக் காட்டுவார். அந்த வயதில் அவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ரசிகர். எம்.ஜி.ஆரின் படங்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பார். எல்லா நேரமும் சினிமா பற்றியே பேசிக்கொண்டிருக்கும் விஜயகாந்த்திற்கு படிப்பு ஏறவில்லை என்றதும், மதுரை கீரைத்துரையில் இருக்கும் தங்களின் அரிசி ஆலையை விஜயகாந்தை கவனித்துக் கொள்ள அனுப்பினார்கள்.

அங்கே போன பிறகும் விஜயகாந்திற்கு சினிமா ஆசை போகவில்லை. மதுரை மாவட்டத்தில் திரைப்படங்களை வெளியிடும் சேனா பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகமது என்பவருடன் நெருக்கம் ஏற்படுத்திக்கொண்டார். எப்படியாவது அவர் மூலம் சினிமாவுக்கு போய்விடலாம் என்று ஆசைப்பட்டார். அவர்தான் விஜயகாந்தை சென்னைக்கு வரவழைத்து இயக்குநர் பி. மாதவனிடம், இவர் அறிமுகப்படுத்தி, விஜயகாந்துக்கு நடிக்க வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.

அன்றைய காலகட்டத்தில் ரஜினிகாந்த் பரபரவென வேகமாக முன்னேறிக்கொண்டு இருந்தார். அப்போது ரஜினியை போன்று முடிவேட்டும், ஸ்டைலுமாக இருந்த விஜயகாந்தை பார்த்ததும், இயக்குநர் பி.மாதவனுக்கு பிடித்துவிட்டது. ஆனாலும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை.

அதன்பிறகு இயக்குனர் எம்.ஏ. காஜாவிடம் விஜயகாந்தை முகமது அறிமுகப்படுத்திவைத்தார்.  விஜயகாந்தை நேரில் வரவழைத்துப் பார்த்த எம்.ஏ.காஜா, தனது இனிக்கும் இளமை படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை விஜயகாந்துக்கு வழங்கினார். அதுவே விஜயகாந்தின் முதல் படமாக அமைந்தது. அவருடைய நண்பரான இப்ராகிம் ராவுத்தரை தன்னுடைய மேனேஜராக மாற்றிக்கொண்டார். பிரேமலதா விஜயகாந்த் வாழ்க்கையில் நுழைந்த பிறகு இவரே விஜயகாந்திற்கு எதிராக நிற்கும் நிலையும் ஏற்பட்டது காலத்தின் கோலம்.

அதன் பிறகு அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் அகல்விளக்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானாலும், அவருக்கு முதல் வெற்றிகரமான படம் என்றால், அது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படம்தான் விஜயகாந்த் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனால்தான் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது ஏகப்பட்ட மரியாதை வைத்திருந்தார். தன்னுடைய படத்தில் நடிகர் விஜய் நடித்தால் அவனுக்கு மார்க்கெட் உயரும் என்று கேட்டுக்கொண்டதை உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்தவர் விஜயகாந்த்.

இதையடுத்து கோபக்கார இளைஞன் என்றால் விஜயகாந்த்தை கூப்பிடுங்கள் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறியது. ராமநாராயணனின் ஆஸ்தான நடிகராக மாறினார் என்றும் சொல்லலாம். சிவப்பு மல்லி, ‘நெஞ்சிலே துணிவிருந்தால், ‘சாதிக்கொரு நீதி, ‘பட்டணத்து ராஜாக்கள், ‘சாட்சி, ‘நீதியின் மறுபக்கம், ‘வசந்தராகம் எனத் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்தார்.

வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், ‘ஊமை விழிகள், ‘கூலிக்காரன் , ‘உழவன் மகன், ‘தெற்கத்திக் கள்ளன், ‘பூந்தோட்ட காவல் காரன், ‘செந்தூரப்பூவே ‘புலன் விசாரணை, ‘சின்ன கவுண்டர், ‘வானத்தைப்போல, ‘ரமணா, ‘சொக்கத்தங்கம் என எண்ணற்ற படங்கள் விஜயகாந்தின் வெற்றி மகுடத்தை அலங்கரித்துள்ளன. பல நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றிப் பெற்றதில்லை. ஆனால், விஜயகாந்தின் நூறாவது படமான ‘கேப்டன் பிரபாகரன் நூறுநாள் கடந்தும் வெற்றிகரமாக ஒடி வசூலில் பெரும் சாதனைப் படைத்தது.

153-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார்.

தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது செந்தூரப்பூவே படத்திற்காக பெற்ற விஜயகாந்த், தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.விருது, கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் குரவங்களையும் பெற்றிருக்கிறார்.

1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

2002-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து `நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை!’ என்கிற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை இயக்குநர் அமைப்புடன் இணைந்து நெய்வேலியில் நடத்தினார். 1990 ஆம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

கருணாநிதிக்கு தங்கப்பேனா வழங்கிய விஜயகாந்த், அவருடைய காலத்திலே அரசியலில் நுழைந்தார். முதல் தேர்தலில் அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் வாக்குகள் வாங்கினார். அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சித் தலைவராக மாறினார். அதுதான் அரசியலில் விஜயகாந்த் பெற்ற மிகப்பெரும் வளர்ச்சி.

சட்டசபையில் ஜெயலலிதாவுடன் மோதிய காரணத்தால் தே.மு.தி.க.வை உடைத்து விஜயகாந்த் மனதை நோகடித்தார். விஜயகாந்த்தின் நம்பிக்கைக்குரிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஜெயலலிதாவின் கைப்பொம்மையாக மாறினார்கள். அந்த துரோகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் நோயில் விழுந்தார்.

அடுத்த தேர்தலில் தி.மு.க.வுடன் வாய்ப்பு வந்தபோது பேச்சுவார்த்தையில் சிறு குழப்பம் நேர்ந்தது. எனவே, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தேர்தலை சந்தித்தார். மிக மோசமான தோல்வியைத் தழுவினார். அதன்பிறகு அரசியலை பற்றி சிந்திக்கவும், பேசவும் முடியாத நிலைக்கு ஆளானார். அதன்பிறகு நடந்த தேர்தல்களில் தே.மு.தி.க.வுக்கு அவமானமான தோல்விகளே கிடைத்தது.

இந்த நிலையில் டிசம்பர் 28 காலையில் திடீரென உடல்நலமின்றி மரணத்தைத் தழுவிவிட்டார். அரசியலில் ஒரு புதிய நட்சத்திரமாக உதித்தவர் அந்த வெற்றியை அறுவடை செய்ய முடியாமல் போனது வரலாற்று சோகம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link