Share via:
மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், டி.வி.எஸ். குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் ரூ.3 கோடி ரூபாயை வழங்கினார்.
சென்னையில் உலுக்கி எடுத்து மிக்ஜாம் புயல் காரணமாக பொது மக்கள் மழைவெள்ள நீரால் சூழப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் பெரியளவில் சேதங்கள் ஏற்பட்டு ஆங்காங்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்களும், மின்மாற்றிகளும் சேதமடைந்து பெரியளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் உதவித்தொகைகளை வழங்கி வருகின்றனர். இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த பகுதிகளில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கும் பல்வேறு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (டிச.8) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணுசீனிவாசன் சந்தித்து ரூ.3 கோடி ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக இத்தொகையை வேணுசீனிவாசன் வழங்கியது பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, டி.வி.எஸ்.குழும இயக்குனர் சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.