Share via:
மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மறுசீரமைப்பு குறித்தும் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.9) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மிக்ஜாம் புயலால் வரலாறு காணாத பெருமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து தீவு போல மாற்றியது. மின்சாரம், உணவு, குடிநீரின்றி பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். பலமாக வீசிய புயல் காற்றால் சாலைகளில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மின்சார ஒயர்கள் மற்றும் மின்மாற்றிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பெரும் சேதத்தை ஏற்படுத்திய மிக்ஜாம் புயலை மத்திய அமைச்சகர்கள் பார்வையிட்ட நிலையில், தமிழகத்திற்கு தேவையான நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசிடம் கோரிக்கையாக முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மக்களுக்கு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் என்னென்ன என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக கேட்டறிந்தார்.