Share via:
மிக்ஜாம் புயல் பாதிப்பு பகுதிகளுக்கு நேரில் சென்ற தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.
மிக்ஜாம் புயல் பேரிடர் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.
சென்னையில் உலுக்கி எடுத்து மிக்ஜாம் புயல் காரணமாக பொது மக்கள் மழைவெள்ள நீரால் சூழப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் பெரியளவில் சேதங்கள் ஏற்பட்டு ஆங்காங்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்களும், மின்மாற்றிகளும் சேதமடைந்து பெரியளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் புகுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் உதவித்தொகைகளை வழங்கி வருகின்றனர். இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த பகுதிகளில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கும் பல்வேறு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (டிச.8) தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மழைநீரால் பாதிக்கப்பட்ட திரு.வி.க.நகர் மண்டலம், புளியந்தோப்பு, டிமலஸ் சாலையில் உள்ள நீரேற்று நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வெளியேற்றும் பணியினை பார்வையிட்டார். மேலும் குருசாமி கால்வாயில் மழைநீர் எளிதில் செல்லும் வகையில் குப்பை கழிவுகளை அகற்றும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கூடுதல் தலைமை செயலாளரும் சென்னை மாநகராட்சி கமிஷனருமான ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசு முதன்மை செயலாளர் முனைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அதேபோல் திரு.வி.க.மண்டலம், ஸ்டீபன்சன் சாலை, பட்டாளம், செங்கைசிவம் மேம்பாலத்தின் அருகில் நீர் வெளியேற்றும் நிலையத்தின் மூலம் ஓட்டேரி நல்லா கால்வாயில் மழைநீர் வெளியேற்றப்படும் பணிகளையும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.