Share via:
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்.
கடந்த 3 மற்றும் 4 (டிசம்பர்) ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெரியளவில் சேதத்தை சந்தித்தது. பொது மக்களின் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ள நீர் புகுந்து அவர்களின் அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இன்று (டிச.25) முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு சென்ற குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த சந்திப்பின் போது இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடன் இருந்தார்.