Share via:
ரசிகர்களுக்கு இலவசமாக டிக்கெட்டைக் கொடுக்காமல் 2000 ரூபாய்க்கு
விற்பவர்களால் நாட்டை எப்படி பாதுகாக்க முடியும்? என்று விஜய் மீது மீண்டும் பாய்ந்திருக்கிறார்
அமைச்சர் தா.மோ.அன்பரசன். அதோடு, ’அரசியல் கட்சிக்குத் தலைவராக வேண்டும் என்றால் அவருக்கு
ஒரு தார்மீகப் பொறுப்பு வேண்டும். அது விஜய்யிடம் சுத்தமா இல்லை’ என்று தி.மு.க.வினர்
தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
கோட் படம் பார்ப்பதற்கு 2000 ரூபாய் தருவதற்கும் விஜய் ரசிகர்கள்
தயாராக இருக்கும் நிலையில், கோட் படத்தின் சிறப்புக் காட்சிக்கு டிக்கெட் விலை 750
ரூபாய் நிர்ணயித்து இருக்கிறார்கள். இதையே கிண்டலும் கேலியுமாக தி.மு.க.வினர் விமர்சனம்
செய்து வருகிறார்கள்.
தி.மு.க.வின் எதிர்ப்பு காரணமாக சில தியேட்டர்களில் சிறப்புக்
காட்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும் பல தியேட்டர்களுக்கும் அரசு நெருக்கடி
கொடுக்கிறது. கோட் படத்தை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று தி.மு.க.வினர் கருதுவதை
ஒரு நல்ல சகுனமாகவே விஜய் ரசிகர்கள் கருதுகிறார்கள்.
அதாவது, எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தடை செய்வதற்கு
தி.மு.க.வினர் எத்தனையோ முயற்சி எடுத்தார்கள். ஆனால், அது தி.முக.வின் தடைகளைத் தாண்டி
வெளியாகி வெற்றி அடைந்தது. அடுத்துவந்த தேர்தலில் தி.மு.க.வை தோற்கடித்து எம்.ஜி.ஆரும்
முதல்வர் ஆனார்.
அதேபோல் இப்போது கோட் படத்துக்கு தி.மு.க.வினர் கடுமையாக எதிர்ப்பு
தெரிவிக்கிறார்கள். இந்த படமும் தி.மு.க.வினரைத் தாண்டி வெற்றி அடையும், விஜய் முதல்வர்
ஆவார் என்று கணக்குப் போட்டு குஷியாகிறார்கள்.