Share via:
தூத்துக்குடியில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்டு வரும் மருத்துவ முகாமை தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேரில் ஆய்வு செய்தார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்த பெருமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டது. மழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த பொது மக்களை மீட்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது மக்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றது.
இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தரப்பினர் நிவாரணப் பொருட்களை வழங்கி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் தூத்துக்குடியில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோரம்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் வெள்ள நிவாரண சிறப்பு மருத்துவ முகாமை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியம், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.