Share via:
அரசியல் களத்தில் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று தெளிவாகப் பேசுபவர், மீடியாக்களிடம் எந்த விஷயம் குறித்தும் பேசுவதற்குத் தயங்காதவர், யாருக்கும் ஜால்ரா போடாதவர் என்று திருமாவளவன் மீது இருந்த அத்தனை மரியாதையையும், மதுவிலக்கு மாநாடு நடத்தி தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்டுள்ளார் திருமாவளவன்.
தி.மு.க. கூட்டணியில் அடுத்து கமல்ஹாசனும் இணைய இருப்பதால் வரும் சட்டமன்றத் தேர்தலில் 6 சீட் வாங்குவதற்கே பெரும் போராட்டம் இருக்கும் என்பதாலே மதுவிலக்கு விவகாரத்தையும் ஆட்சியில் பங்கு என்ற கொள்கையையும் கையில் எடுத்து தன்னுடைய பவரைக் காட்ட நினைத்தார் திருமாவளவன். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால், ஆட்சியில் பங்கு என்று கேட்டுவிட்டு, அது அட்மின் கருத்து என்று பேசிய நேரத்தில் தான் திருமா தடுமாறி விழுந்துவிட்டார்.
கட்சியில் சமீபத்தில் நுழைந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கும் ஆதவ் அர்ஜுனே திருமாவளவனுக்காக இந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்துகிறார் என்பதும் தலையாட்டி பொம்மையாக திருமாவளவன் மாறிவிட்டார் என்பதும் இதையடுத்தே எல்லோருக்கும் தெரிந்துபோனது. கட்சிக்குள் பூசல் இருப்பதும் அம்பலமாகிப்போனது.
மது விலக்கு மாநாடு என்றதும் யார் வேண்டுமானாலும் வரலாம் என்றார். அதேநேரம், பா.ஜ.க.வும் பா.ம.க.வும் வரக்கூடாது என்று குழப்பினார். மதுவிலக்கு உத்தரவு போட வேண்டிய தி.மு.க.வையும் மேடைக்கு அழைத்து, ‘மத்திய அரசு நாடு முழுக்க மதுவிலக்கு கொண்டுவந்தால் மட்டுமே முடியும்’ என்று தெளிவாகப் பேச வைத்து, இந்த மாநாடு வீண் என்பதை எல்லோருக்கும் அவரே சொல்லியும் விட்டார்.
இதே பாணியில், அடுத்து ஊழல் ஒழிப்பு மாநாடு ஒன்று நடத்தி, ஸ்டாலினைக் கூப்பிடுங்க தலைவரே என்று ஆதவ் அர்ஜூன் ஐடியா கொடுத்தாலும் கொடுப்பார், அதையும் திருமாவளவன் செய்தாலும் ஆச்சர்யம் இல்லை.