Share via:
கொல்கத்தா முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவத்துறை மட்டுமல்லாமல் பொது மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதால் இது நாடு தழுவிய போராட்டமாக மாறியுள்ளது.
நான் தான் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தேன் என்று இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 33 வயதான சஞ்சோய் ராய், திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்தது அதிர்ச்சியின் உச்சம். அதோடு என்னை தூக்கில் போட்டாலும் பரவாயில்லை என்று திமிராக பேசியதும் மக்களை வெகுண்டெழ செய்துள்ளது. அதோடு கைது செய்யப்பட்டுள்ள ராய், என் மகளை உடல்ரீதியாக துன்புறுத்தியதாக காளிகட் காவல் நிலையத்தில் அவருடைய மாமியார் பரபரப்பு பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சோய் ராய் உண்மையான குற்றவாளியில்லை. இதன் பின்னணியில் முக்கிய பிரமுகர்களின் கைங்கர்யம் உள்ளது என்று பலதரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர்.
இச்சூழ்நிலைகள் மொத்தமாக கூட்டு சேர்ந்து மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ஆட்சியை கவிழ்க்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. அதன்படி மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த் போஸ் திடீரென்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லி சென்றுள்ள அவர், பிரதமர் நரேந்திரமோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் மேற்குவங்க ஆட்சிக்கட்டிலில் இருந்து மம்தா பானர்ஜி தூக்கிவீசப்படுவார் என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.