Share via:
புதிய ஜவுளிக் கொள்கையை வகுத்து ஜவுளித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், ‘‘மின் கட்டணத்தை குறைக்கக் கோரி அமைச்சர்களையும், அரசு உயர் அதிகாரிகளையும், ஜவுளித்துறையினர் சந்தித்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினர் சங்கம் கடந்த 5ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் வருகிற 25ம் தேதி வரை 20 நாட்கள் நீடிக்கும் என்பதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழப்பதுடன் அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
அத்துடன் வருகிற தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாட முடியாத அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே மின்கட்டண உயர்வை திரும்பப் பெற்று, புதிய ஜவுளிக் கொள்கையை வகுத்து ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும் இது குறித்து விசைத்தறி மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினரை உடனடியாக அழைத்து பேசி, போராட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.