Share via:
இயற்கை பெருந்துயரமாக நடந்திருக்கும் வயநாடு நிலச்சரிவு 340க்கும்
மேற்பட்ட நபர்களின் உயிரைப் பறித்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.
ஏராளமான நபர்கள் ஒரே இரவில் அத்தனை சொத்துக்களையும் பறிகொடுத்து ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் வருகை பாதிக்கப்பட்டவர்களுக்கு
நம்பிக்கை கொடுத்தது. நிலச்சரிவு தொடங்கிய இடம் வரையிலும் நேரில் சென்று பார்வையிட்ட
ராகுல் காந்தி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களையும், இறந்தவர் உடல்களையும்
பார்த்து வேதனை தெரிவித்தார். அதோடு காங்கிரஸ் கட்சி சார்பில் 100 வீடுகள் கட்டிக்
கொடுக்கப்படும் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.
வயநாட்டில் ராகுல் காந்தியின் துணிச்சலான பயணம் வைரலானது போலவே,
இன்னொரு நபருடைய துணிச்சலும் செயலும் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. அவர் தான் மேஜர்
சீதா ஷெல்கே.
நிலச்சரிவு காரணமாக துண்டிக்கப்படிருந்த பகுதியில் மீட்புப்பணி
மேற்கொள்ள முடியாத அளவுக்கு தண்ணீர் பாய்ந்துகொண்டிருந்தது. இந்த நேரத்தில் 18 மணி
நேரத்தில் தற்காலிகப் பாலம் கட்டி இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்டின்
Madras Engineering Group(MEG) வீரர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். மேஜர் சீதா ஷெல்கே
தலைமையிலான இன்ஜினியரிங் வீரர்கள் தான் இந்தப் பாலத்தை விரைவாக கட்டி முடித்தார்கள்.
இந்த பாலம் கட்டப்பட்டதாலே ஏகப்பட்ட பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள்.
மீட்புப் பணியும் வேகமெடுக்கவும், பொருட்கள் மீட்கவும் முடிந்திருக்கிறது. அத்தனை நேரமும்
மழையில் நின்று அனைவருக்கும் வழிகாட்டிய சீதா ஷெல்கேவுக்கு இப்போது பாராட்டு குவிந்துவருகிறது.
நாட்டு மக்களுக்காக ஆபத்துக் காலங்களில் சேவை செய்கின்ற சீதா போன்ற
வீராங்கனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவிக்க வேண்டியது இந்தியர்களின் கடமை. சபாஷ் சீதா.