Share via:
யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரபல யூடியூபரான டி.டி.எப்.வாசன், கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் சென்னை& பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் ஓட்டும் போது முன்சக்கரத்தை தூக்கி விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரது வலதுகை முறிந்ததுடன் வாகனமும் சேதமடைந்தது.
இது குறித்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பாலுசெட்டிசத்திரம் போலீசார், டி.டி.எப்.வாசனை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். அப்போது தனக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலை எதிர்த்து டி.டி.எப். வாசன் காஞ்சிபுரத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது ஜாமீன் மனுவை மறுத்த நீதிபதி, இளைஞரகள் சிலர் தவறான பாதைக்கு சென்றுவிட வாய்ப்புள்ளதாக தெரிவித்ததுடன், 10 ஆண்டுகளுக்கு டி.டி.எப்.வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.டி.எப். வாசன் ஜாமீன் கேட்டு மனு அளித்த நிலையில், காவல்துறை சார்பில் எந்த மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 40 நாட்களாக சிறையில் இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று டி.டி.எப். தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், டி.டி.எப்.வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி தினமும் 3 வார காலத்திற்கு பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.