Share via:
தேர்தலுக்கு 25 கோடி ரூபாய் வாங்கினாலும் அவ்வப்போது திமுகவுக்கு
எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் குண்டு போட்டுவருகிறார்கள். இப்போது சிபிஎம் மாநிலக்குழு
நிறைவேற்றியுள்ள 3 முக்கிய தீர்மானங்கள் திமுகவை திணற வைத்துள்ளது.
குறிப்பாக ஒப்பந்தப் பணியாளர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மின்சாரம், போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட
பொதுத் துறை நிறுவனங்களிலும், மாநில அரசு துறைகளிலும் சுமார் 4 லட்சம்
பணியிடங்கள் காலியாக உள்ளன. லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து
காத்துக்கிடக்கின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு காலிப்பணியிடங்களை நிரப்பாமல், அரசு மற்றும்
பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க ஓவர்சீஸ் மேன்பவர்
கார்ப்பரேசன் லிமிட்டெட் (OVERSEAS MANPOWER CORPORATION LTD) என்ற நிறுவனத்தை
உருவாக்கியுள்ளது.
இந்நிறுவனத்தின் மூலம் அலுவலக பணியாளர்களர், தூய்மை
பணியாளர்கள், ஓட்டுநர், தட்டச்சர், கணக்குப்
பணியாளர்கள், மேலாளர்
உள்ளிட்ட 22 பணிகளுக்கு
தொகுப்பூதியம் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளை சேர்த்து மாதாந்திர சம்பளமாக குறைந்த
ஊதியம் நிர்ணயம்
செய்யப்பட்டு, அரசின்
அனைத்து துறைகளிலும் பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
நிரந்தரத்தன்மை உள்ள பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கக்
கூடாது என்று ஒப்பந்த தொழிலாளர் முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல் சட்டம் 1970 தெளிவாக
கூறுவதை, சட்டம்
இயற்றிய மாநில அரசே மீறுவது இயற்கை நீதிக்கு எதிரானது. அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை, தமிழக அரசு
தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து நியமனம் செய்தால் இட ஒதுக்கீடும், சமூக நீதியும்
பாதுகாக்கப்படும். ஆனால், இதுபோன்ற ஏஜென்சிகளை உருவாக்கி நிரந்தர பணிகளில் ஒப்பந்த
முறையை புகுத்துகின்ற
பொழுது, பணிப் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பான
ஓய்வூதியம், ஆண்டு உயர்வு, பதவி உயர்வு
என அனைத்தும் பறிபோகும். இட ஒதுக்கீடும் கேள்விக்குறியாகும்.
ஏற்கனவே அரசுத்துறையில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, காண்ட்ராக்ட்
முறைகளில் பல்லாண்டுகளாக பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்த வேண்டுமென
தொடர்ந்து போராடி வரும் நிலையில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக தமிழக
அரசு மீண்டும் ஒப்பந்த முறையை திணிப்பது, தொழிலாளர்கள் – இளைஞர்கள் மத்தியில்
பெரும் கோபாவேசத்தை உருவாக்கும் என்பதை சிபிஐ (எம்) சுட்டிக்காட்டுகிறது. எனவே, திமுக அரசு 2021 இல் வெளியிட்ட
தேர்தல் அறிக்கை எண் 153 இல் தெரிவித்துள்ளவாறு மின்சாரம், போக்குவரத்து
உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த
வேண்டும். மாநில அரசின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட
வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிட்டெட் மூலம் பணியாளர்களை
அரசுத்துறைகளில் நியமிப்பது என்ற அரசானையை உடனடியாக கைவிட வேண்டுமெனவும், காலிப்பணியிடங்களை
நிரந்தரப்பணி அடிப்படையில் பூர்த்தி செய்திட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
இப்படி கேட்பதெல்லாம் சும்மா ஒரு கணக்கு மட்டும்தான். கூட்டணியை
உடைக்க மாட்டாங்க என்பது திமுகவுக்கு நன்றாகவே தெரியும்.