Share via:
புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை வா வா என்று அழைத்து வீடியோ எடுக்க முயற்சித்த 3 இளைஞர்களை சிறுத்தை பாய்ந்து வந்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியபிரதேசத்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஷாதோல் மாவட்டத்தில் உள்ள கோபாரு ஜெய்த்தூர் காடுகளில் உதவி சப்இன்ஸ்பெக்டர் நிதின் சம்தாரியா, ஆகாஷ் குஷ்வாஷா (வயது 23) மற்றும் நந்தினி சிங் (வயது 25) ஆகிய மூவர் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களுடன் 50 முதல் 60 பேரும் சுற்றுலா சென்றுள்ளனர்.
அப்போது காட்டு பகுதிகளுக்கு நடைபாதையாக சென்ற மூவரும் சிறுத்தை ஒன்று புதருக்குள் பதுங்கியிருந்ததை பார்த்துள்ளனர். உடனே செல்போனில் வீடியோ எடுத்தபடி சிறுத்தையை பார்த்து வா வா என்று விளையாட்டாக குரல் எழுப்பியுள்ளனர். எதிர்பாராத விதமாக பாய்ந்து வந்த சிறுத்தை 3 இளைஞர்களையும் கடுமையாக தாக்கியது. வலியால் துடித்த இளைஞர்கள் போடும் சத்தத்தை கேட்ட மற்ற சுற்றுலாவாசிகள் ஓடி வந்ததால் சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் தப்பியோடியது.
இதைத்தொடர்ந்து 3 இளைஞர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுத்தை இளைஞர்களை தாக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காட்டு யானைகளை வேண்டுமென்றே செல்பி எடுத்து தொந்தரவு செய்து சிக்கலில் சிக்கிக் கொள்வது உள்ளிட்ட சேட்டைகளில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என்று வனத்துறையினர் எவ்வளவு எச்சரிக்கை விடுத்தாலும் கண்டுகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.