Share via:
‘லியோ’ திரைப்படத்தின் பட தயாரிப்பு நிறுவனம் காவல்துறைக்கு எழுதியுள்ள திடீர் கடிதம் தமிழ் திரையுலகில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இத்திரைப்படத்தில் மொத்த நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் பான் இந்தியா படமாக பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையிட தயாராக உள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா வருகிற செப்.30ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் நடிகர் விஜய் சொல்லப் போகும் குட்டி ஸ்டோரி என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் 30ம் தேதி நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில், அதிகளவில் பாஸ் கேட்கப்படுவதாகவும், பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிக்களின் நலனை கருத்தில் கொண்டு இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் அரசியல் அழுத்தம் காரணமாகவே லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் செய்திகள் காட்டுத்தீயாக பரவியது.
இந்நிலையில் இசைவெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் விழாவுக்கான பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் அளித்த கடிதத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டியோடுஸ் கடிதம் மூலம் திரும்பப் பெற்றுள்ளது. அந்த கடிதத்தில், ‘‘வருகிற 30ம் தேதி (செப்.) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருந்த லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் கடந்த 20ம் தேதி பாதுகாப்பு கேட்டு கொடுத்த கடிதத்தை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடையூறுக்கு மன்னிக்க வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையிடம் பாதுகாப்பு கோரி அளிக்கப்பட்ட கடிதம் திரும்பப் பெறப்பட்ட நிலையில், ஒரு வேளை நிகழ்ச்சி நடக்குமோ என்று நினைத்திருந்த ரசிகர்கள் மனதில் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவின் போதும் விஜய் தனது ரசிகர்களின் பலத்தை வெளிக்கொணரும் போது இப்போது ஏற்பட்டுள்ளது மிகப்பெரிய சறுக்கல் என்று தமிழ்த் திரையுலகத்தினர் விமர்சித்து வருகின்றனர்.