Share via:
நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நாளை (நவ.18) கூடும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் முன்வைக்கப்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்று (நவ.16) 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
இதில் தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா, பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே செயல்படும் வகையில் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் அடங்கும்.
மசோதாக்களை திருப்பி அனுப்பியது குறித்து நாளை நடைபெற உள்ள சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் விவாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து தெரிவித்து நாளைய கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
முன்னதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறும்போது, ‘‘சட்ட மசோதாக்களை இயற்றுவது தமிழக அரசின் வேலை என்றால், அதனை ஆராய வேண்டியது ஆளுநரின் வேலை. கண்மூடித்தனமாக எல்லாவற்றுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க முடியுமா?’’ என்று கேள்வி எழுப்பினார். இதன் தொடர்ச்சியாகத்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் புறக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.