Share via:
லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதம் வந்த நிலையில் அதனை செப்டம்பர் மாதம் வெளியிட்டது எதற்காக என்று சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி எழுப்பி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
திருப்பதி லட்டு விவகாரம் சர்வதேச பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்துள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்ததோடு, ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதற்கிடையில் லட்டு விவகாரத்தில் உண்மைதன்மையை ஆராய்வதற்காக சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று (செப்.30) பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது ஆந்திர தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் தரத்தை ஆய்வு செய்வதற்காக 2 முறை அனுப்பினோம்’’ என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கிடுக்குப்பிடி கேள்வி கேட்டு கண்டனம் தெரிவித்தது.
அதாவது திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் நீங்கள், இந்த விவகாரத்தை எதற்காக நேரடியாக ஊடகங்களிடம் கொண்டு சென்றீர்கள்? மேலும் லட்டு பிரசாத ஆய்வறிக்கை கடந்த ஜூலை மாதமே வந்திருந்த நிலையில், அதனை காலதாமதப்படுத்தி செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்?என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் ஆய்வகத்தில் இருந்து வெளியான அறிக்கையில் தரவுகள் தெளிவாக இல்லை. ஆய்வு மாதிரியில் பயன்படுத்தப்பட்ட நெய் தான் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டதா என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவிலை. திருப்பதி லட்டு விவகாரத்தில் கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது. மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு கடும் கண்டனத்துடன் கூறியது பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.